
உனக்கும் எனக்குமிடையேயான விளையாட்டில் மேலுமொரு சீட்டுக்கட்டு கலைகிறது நம்மையுமறியாமல்!
இல்லையெனில் இவ்வளவு குழப்பங்கள் தரும் புதிர்களும், ஆயாசங்களும் திடீரென உன்னுள் நுழைந்திருக்குமா என்ன?
நமது பரஸ்பர புரிதல்களையும், விட்டுக் கொடுத்தல்களையும் நொடிகளில் நீ கடந்த காலமாக்கிவிட்டாய்!
உன் அர்த்தமற்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான என் கனத்த மெளனம் உன்னை ஆத்திரப்படுத்தியிருக்கக் கூடும் தான்
அதற்காக பின்புலங்களற்ற உன் எல்லா குற்றச்சாட்டுகளையும், அனுமானங்களையும் ஒரேடியாக ஏற்றுக் கொள்வதற்கில்லை
சில கணங்களில் என்னுள் சேகரமாயிருந்த சுடுசொற்களை மெல்ல மென்று பின் விழுங்கிக் கொண்டேன்
சாஸ்வதமான காலம் தரவிருக்கும் சொஸ்தப்படுத்துதல்கள் மட்டுமே இப்போதைக்கு அமைதி தருகின்றன
எனது அகவயமான காயக்கண்களை மீண்டும் மீண்டும் தீண்டத் துழாவுகின்றன விரிந்து நீளும் உன் அமில நாக்குகள்
சொற்களாவது பரவாயில்லை, நீ இன்றெனக்கு செய்து கொண்டிருக்கும் துரோகத்தின் துயர நிழல்களை எங்ஙனம் துடைப்பேன்?
உன்னை ஆசுவாசப்படுத்தவோ, நமதுறவின் அருமை விளக்கவோ எனக்கு நீ எந்த கால அவகாசமும் அளிக்கவேயில்லை
அதெல்லாம் இருக்கட்டும், நீ தொடரும் தவறுகளை எடுத்துணர்த்த உனக்கு ஒரு நண்பன் கூடவா இல்லாமல் போவான்?
பிற்பாடு உண்மையுணர்ந்து நீ என்னை சந்திக்க எத்தனிக்கையில் இயல்பாகச் சிரித்துத் துளிர்க்கும் நமதுறவு!