நான் எதிர்பாராத்தன்மையை நேசிப்பவன் தான்; ஆனால் இம்மாதிரியான தாக்குதலையல்ல
நீ காதலை தெரிவித்த கணம் ஒரு கனத்த அமைதிக்குப் பிறகானதாக இருந்திருக்கலாம்
மற்றபடி காதல் தெரிவிக்கப்பட்ட விதம் மிகக் கெளரவமானதாகவே இருந்தது
பிறகு தான் கவனித்தேன், உன் ஆடைகளிலும் சிகையலங்காரத்திலும் இன்றிருந்த மாற்றத்தை!
எப்போதும் போலல்லாமல் இன்று நீ எனக்கென எந்த கால அவகாசமும் தரவில்லை
'இந்த மூக்குக் கண்ணாடி உனக்கு பொருத்தமானதாக இல்லை’ என்கிறாய் சிறிதும் சலனமின்றி
தெரிவித்தலை தொடர்ந்த உனது சுவாரஸ்யப் பேச்சில் திக்கற்று திகைக்கின்றேன் நான்
வளர்பிறை தோன்றும் இம்மாலைப்பொழுது நீ தேர்ந்தெடுத்ததா?, இல்லை இயல்பாக அமைந்துவிட்ட ஒன்றா?
நமது நட்பு குறித்து பிற்பாடு எழப்போகும் கேலிகளைப் பற்றி இப்போது வருந்துவதற்கில்லை
வாடிக்கையான நண்பனின் வருகை இன்று மட்டும் ஏனோ குற்றவுணர்வை தோற்றுவிக்கிறது
பிறர் அறிந்துவிடாமலிருக்க நான் மேற்கொள்ளும் கவனங்களில் என் உடல் மொழி இயல்பிழக்கிறது
நேரம் தேய்ந்து கொண்டிருக்கிறது; முதலில் இந்த மூக்குக் கண்ணாடியை மாற்ற வேண்டும்!
மறுக்கப்பட்ட காதலென்று எதுவும் உண்டா என்ன? அதுவும் ஒரு பெண் சொல்லி!
நாளை நாம் சந்திக்கப்போகும் அக்கணங்கள் மீண்டும் மீண்டும் என் நினைவிலாடுகின்றன
இப்போதைய எனது கவலையெல்லாம் முடிவின்றி நீளப் போகும் இவ்விரவைப் பற்றியதுதான்!
No comments:
Post a Comment