Saturday, September 3, 2011

மலைகளினூடான பயணங்கள்...!



மலைகளினூடான பயணங்கள்
எல்லா குழந்தைகளையும் குதூகலப்படுத்துகின்றன‌
பல மத்திம வயதுக்காரர்களை குழப்புகின்றன‌
சில மத்திம வயதுக்காரர்களை ஆசுவாசமடையச் செய்கின்றன‌


மலைகளினூடான ஒரு பயணத்தின் தொடக்கத்தில்
பாக்கியவான்கள் யார்யாரென முடிவாவதில்லை
அவர்களை மலைகளினூடான ஒரு பயணமோ
அல்லது யாரோ ஒரு பயணியோ முடிவு செய்வதில்லை
மாறாக அவர்களை மலைகள் மட்டுமே கண்டுணர்கின்றன‌


மலைகளினூடான பயணங்களில்
குழந்தைகள் கேள்வி கேட்கத் தொடங்கி விடுகிறார்கள்
மலைகளுக்கு அப்பால் உள்ளவை பற்றி
மலைகளில் வசிக்கும் பறவைகள், விலங்குகள் பற்றி
மலைகளிலிருந்து விழும் அருவிகள் பற்றி
பாம்புகள் இருக்குமா என்ற தமது அச்சங்கள் பற்றி
அவர்கள் சிந்தனைகள் எளிமையானவை
அதற்கு எளிய பதில்கள் மட்டுமே போதுமானவை
மலைகளினூடான பயணங்களில்
குழந்தைகள் யாவுமே தூங்க முற்படுவதில்லை
மலைகளினூடான பயணத்திற்குப் பிறகு
மலைகளை வரைவது அவர்களுக்கு இலகுவாகிறது
தான் கண்ட அல்லது காணாத சூர்யோதத்தையோ, அஸ்தமனத்தையோ
அவர்களால் மலைகளுடன் பொருத்திப் பார்க்க‌ இயல்கிறது


மலைகளினூடான பயணங்களில்
பல மத்திம வயதுக்காரர்கள் குழப்பமடைகிறார்கள்
பொன்பொருள் நோக்கிய வாழ்வில் தாம் தோல்வியடைவ‌தைப் பற்றி
தமது துர்கனவுகள் ஒவ்வொன்றாக‌ நிறைவேறுவதைப் பற்றி
நிறைவேறாத தனது காதலை அல்லது காமத்தைப் பற்றி
பிள்ளைகள் தம் சுயவிருப்பங்களில் உறுதியடைவதைப் பற்றி
சமூகத்தில் தாம் புறக்கணிக்கப்பட்ட தருணங்களைப் பற்றி
மிச்சமிருக்கும் கடன்களை திருப்பி செலுத்துவதைப் பற்றி
மலைகளினூடான பயணங்களில் பயணக்களைப்பை மீறாமல்
இம்மத்திம வயதுக்காரர்கள் தூங்க முற்படுகிறார்கள்
தம்மால் துவேஷிக்கப்பட்டவர்களின் கண்கள்
ஒருபோதும் அவர்களை தூங்க அனுமதிப்பதேயில்லை


மலைகளினூடான பயணங்களில்
சில மத்திம வயதுக்காரர்கள் ஆசுவாசப்பட்டுக் கொள்கிறார்கள்
வாழ்க்கைப் பயணத்தில் தான் அடைந்த வெற்றிகள் குறித்து
தம் பிள்ளைச்செல்வங்கள் வாழக் கற்றுக் கொண்டது குறித்து
இந்நாள்வரை தான் அணிந்து வரும் கெளரவமான ஆடைகள் குறித்து
தாம் செய்த தவறுகள் தமக்கு மட்டுமே தெரிந்திருப்பது குறித்து
தம்மைத் தேடி வந்தவர்களையும் அவர்களளித்த கெளரவங்கள் குறித்தும்
அவர்கள் பெருமிதத்துடன் ஆசுவாசமடைந்து கொள்கிறார்கள்
மலைகளினூடான பயணங்களில்
இம்மத்திம வயதுக்காரர்கள் தூங்க முற்படுவதில்லை
மாறாக பயணம் தரும் களைப்பு அவர்களை கண்ணயரச் செய்கின்றது


மலைகளினூடான மனிதர்களின் தீராத‌ பயணங்களில்
மலைகள் யாரைப் பார்த்தும் புன்னகைப்பதில்லை
யாரையும் அச்சம் கொள்ளச் செய்வதில்லை
மனம் பிறழ்ந்து திரிபவர்களை ஏளனம் செய்வதில்லை
தமது சாசுவதம் குறித்து இறுமாப்படைவதில்லை
மாறாக மலைகள் யாவுமே மெளனமுற்றிருக்கின்றன‌


தம்மைக் கடந்து செல்பவர்களுக்கெல்லாம்
மலைகள் கற்பிக்க விரும்புவது ஒன்றை மட்டும்தான்
அது ஆழ்ந்து மெளனித்திருத்தலைப் பற்றியது!
மலைகளினூடான பயணங்களில் குழந்தைகள் தவிர்த்து
தூங்குபவர்கள் தூங்க முற்படுபவர்கள் யாவருமே பாக்கியவான்களல்ல‌
மலைகள் கற்பிப்பதை உணர முற்படுபவர்களே பாக்கியவான்கள்
அவர்களை மலைகள் மட்டுமே கண்டுணர்கின்றன!

Wednesday, November 24, 2010

அபத்த வாழ்வின் சூத்திரங்கள்!


வாழ்வில் தம்மை வெற்றி பெற்றுவிட்டதாக பாவனை புரிபவர்கள்

வெற்றியின் சூத்திரங்களை கற்று தேர்ந்துவிட்டதாக கருதிக் கொள்கிறார்கள்

தாமறிந்த சூத்திரங்களை அவர்கள் பிறருக்கு கற்பிப்பதேயில்லை

தாமாக கற்றுத் தேர்பவர்களை முன்னேற வழிவிடுவதுவுமில்லை

மாறாக அவர்களிடத்து ஒருவித கள்ளப்புன்னகை உதிர்க்கிறார்கள்

வெற்றியின் பீடம் நோக்கிய வழுக்குமரத்தில் பிடிகள் இறுகுகின்றன

அதில் ஒரு குறிப்பிட்ட தொலைவு முன்னேறிச் சென்றவுடன்

வாழ்வின் அத்துனை வெற்றிகளையும் அடைந்துவிட்டதாக அறிவிக்கிறார்கள்

அவர்களின் புன்னகை முகங்களில் இப்பொழுது மமதையின் கெக்களிப்பு

மேலே இருப்பது பீடங்களல்ல பீடம் மட்டுமேயென உறுதியடைந்ததும்

அவர்களுக்குள் விரைவாகப் பற்றிக் கொள்கிறது அதீத பதட்டமொன்று

அபத்த வாழ்வின் வெற்றி சூத்திரங்கள் பத்திரப்படுத்தப்படுகின்றன

அவற்றை கீழே நிற்பவர்கள் புரிந்து கொள்ள விடப்படுவதேயில்லை

வேர் பற்ற விழைந்து பின் நம்பிக்கையிழந்து வெளியேறுபவர்களின்

பெருமூச்சு வெப்பக்காற்றில் இறுகுகின்றன வழுக்குமரத்தின் வேர்கள்

அவை வெறுப்பின் கசப்புறிஞ்சி பண வாசனையை பரவவிடுகின்றன

அவர்கள் தமது குழந்தைகள் புரிந்துகொள்ளும் வயதெட்டும் வரை

விரல்கள் கடுக்க பற்றியிருக்கிறார்கள் பளபளப்பேறிய அவ்வழுக்குமரத்தை

எதையும் ஒப்புக் கொடுப்பதென்பது அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டிருக்கிறது

அபத்த வாழ்வின் வெற்றி சூத்திரங்களைக் கற்றுவிட்டதாக நினைப்பவர்கள்

கறந்த பாலின் வெம்மைக்கான காரணத்தை உணர்ந்திருக்கவில்லை

பிறந்த குழந்தையின் சிரிப்பை பொருட்படுத்துவதேயில்லை

உழைத்துக் களைத்தவனின் முகச்சுருக்கங்களை கவனிப்பதேயில்லை

பனித்துளியொன்றின் அழகிய கணங்களை அனுபவிப்பதில்லை

காற்று இலைகளோடு பேசும் மொழியைக் கற்றிருக்கவில்லை

சூரியக்கதிர்களின் சொஸ்தப்படுத்தும் சக்தியைத் தெரிந்திருக்கவில்லை

மலைகளின் நீண்ட கனத்த மெளனத்தைப் புரிந்திருக்கவில்லை

பற்றற்று விலகியவர்களின் ஒளிரும் முகங்களை தரிசிப்பதேயில்லை

அவர்கள் கடைசிவரை ஒத்துக் கொள்ள முயற்சிப்பதேயில்லை

வாழ்வின் சூத்திரங்கள் எதை நிறுவ முற்படுகின்றனவென்பதை!

Tuesday, July 27, 2010

துரோகத்தின் சுடு நிழல்கள்!



உனக்கும் எனக்குமிடையேயான விளையாட்டில் மேலுமொரு சீட்டுக்கட்டு கலைகிறது நம்மையுமறியாமல்!

இல்லையெனில் இவ்வளவு குழப்பங்கள் தரும் புதிர்களும், ஆயாசங்களும் திடீரென உன்னுள் நுழைந்திருக்குமா என்ன?

நமது பரஸ்பர புரிதல்களையும், விட்டுக் கொடுத்தல்களையும் நொடிகளில் நீ கடந்த காலமாக்கிவிட்டாய்!

உன் அர்த்தமற்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான என் கனத்த மெளனம் உன்னை ஆத்திரப்படுத்தியிருக்கக் கூடும் தான்

அதற்காக பின்புலங்களற்ற உன் எல்லா குற்றச்சாட்டுகளையும், அனுமானங்களையும் ஒரேடியாக ஏற்றுக் கொள்வதற்கில்லை

சில கணங்களில் என்னுள் சேகரமாயிருந்த சுடுசொற்களை மெல்ல மென்று பின் விழுங்கிக் கொண்டேன்

சாஸ்வதமான காலம் தரவிருக்கும் சொஸ்தப்படுத்துதல்கள் மட்டுமே இப்போதைக்கு அமைதி தருகின்றன

எனது அகவயமான காயக்கண்களை மீண்டும் மீண்டும் தீண்டத் துழாவுகின்றன விரிந்து நீளும் உன் அமில நாக்குகள்

சொற்களாவது பரவாயில்லை, நீ இன்றெனக்கு செய்து கொண்டிருக்கும் துரோகத்தின் துயர நிழல்களை எங்ஙனம் துடைப்பேன்?

உன்னை ஆசுவாசப்படுத்தவோ, நமதுறவின் அருமை விளக்க‌வோ எனக்கு நீ எந்த கால அவகாசமும் அளிக்கவேயில்லை

அதெல்லாம் இருக்கட்டும், நீ தொடரும் தவறுகளை எடுத்துணர்த்த உனக்கு ஒரு நண்பன் கூடவா இல்லாமல் போவான்?

பிற்பாடு உண்மையுணர்ந்து நீ என்னை சந்திக்க எத்தனிக்கையில் இயல்பாகச் சிரித்துத் துளிர்க்கும் நமதுறவு!

இது மற்றுமோர் காதல் கவிதையல்ல!



நான் எதிர்பாராத்தன்மையை நேசிப்பவன் தான்; ஆனால் இம்மாதிரியான தாக்குதலையல்ல‌

நீ காதலை தெரிவித்த கணம் ஒரு கனத்த அமைதிக்குப் பிறகானதாக இருந்திருக்கலாம்

மற்றபடி காதல் தெரிவிக்கப்பட்ட விதம் மிகக் கெளரவமானதாகவே இருந்தது

பிறகு தான் கவனித்தேன், உன் ஆடைகளிலும் சிகையலங்காரத்திலும் இன்றிருந்த மாற்றத்தை!

எப்போதும் போலல்லாமல் இன்று நீ எனக்கென எந்த கால அவகாசமும் தரவில்லை

'இந்த மூக்குக் கண்ணாடி உனக்கு பொருத்தமானதாக இல்லை’ என்கிறாய் சிறிதும் சலனமின்றி

தெரிவித்தலை தொடர்ந்த உனது சுவாரஸ்யப் பேச்சில் திக்கற்று திகைக்கின்றேன் நான்

வளர்பிறை தோன்றும் இம்மாலைப்பொழுது நீ தேர்ந்தெடுத்ததா?, இல்லை இயல்பாக அமைந்துவிட்ட ஒன்றா?

நமது நட்பு குறித்து பிற்பாடு எழப்போகும் கேலிக‌ளைப் பற்றி இப்போது வருந்துவதற்கில்லை

வாடிக்கையான‌ நண்பனின் வருகை இன்று மட்டும் ஏனோ குற்றவுணர்வை தோற்றுவிக்கிறது

பிறர் அறிந்துவிடாமலிருக்க நான் மேற்கொள்ளும் கவனங்களில் என் உடல் மொழி இயல்பிழக்கிறது

நேரம் தேய்ந்து கொண்டிருக்கிறது; முதலில் இந்த மூக்குக் கண்ணாடியை மாற்ற வேண்டும்!

மறுக்கப்பட்ட காதலென்று எதுவும் உண்டா என்ன? அதுவும் ஒரு பெண் சொல்லி!

நாளை நாம் சந்திக்கப்போகும் அக்கணங்கள் மீண்டும் மீண்டும் என் நினைவிலாடுகின்றன‌

இப்போதைய எனது கவலையெல்லாம் முடிவின்றி நீளப் போகும் இவ்விரவைப் பற்றியதுதான்!

Friday, November 6, 2009

எனது கோப்பைகள் சிரிக்கின்றன!


விருப்பமேயில்லை என்று அறிந்தேதான் அழைத்திருந்தேன் அவனை

வந்த கட்டாயத்திற்காவது விழைந்திருக்கலாம்; புன்னகைத்திருக்கலாம்

செத்த சொற்களை உதிர்த்து தன் கட்டாய இருத்தலை காட்டாமலிருந்திருக்கலாம்

கோப்பையைப் பிடித்த லாவகத்தை சற்றே மாற்றியமைத்திருந்திருக்கலாம்

எப்பொழுதும் போலல்லாமல் இடக்கையைப் பயன்படுத்தியிருக்க வேண்டியதில்லை

இருக்கையில் சற்றே தளர்ந்த தொனியிலாவது அமர்ந்திருந்திருக்கலாம்

பல சமயங்களில் சூழலின் இறுக்கமே சொல்லிவிடுகின்றன எல்லாவற்றையும்

விருப்பமின்றி அருந்துவதென்பது தெரிந்தே நஞ்சினை உட்கொள்வது போலாகும்

கோப்பை வேறு என்னைப் பார்த்து கெக்களிக்க ஆரம்பித்துவிட்டிருந்தது

அவனுக்கு தன்னை சூழலுக்கேற்றவாறு மாற்றிக் கொள்ள தெரியவில்லை -

திரவமானது தான் ஊற்றப்படும் கோப்பையின் வடிவத்திற்கு மாறிக் கொள்வதைப்போல!

கலைக்கப்படாத மெளனத்தின் சாட்சியாய் தளும்பிக் கொண்டேயிருந்தது கோப்பை -

என் விருப்பத்திற்கும் வெறுப்பிற்கும் இடையில் நிரம்புவதும், தீர்வதுமாய்!

நேரம் மெளனத்தின் சஞ்சலத்தை எப்பொழுதும் இருமடங்காக்கவே செய்கிறது

பற்றவைத்த சிகரெட் புகை வேறு மெளனத்திரையில் கறையேற்றிக் கொண்டிருந்தது

மகிழ்ச்சியாயிறங்காத ஒவ்வொரு மிடரும் துக்கத்துடனேயே தொண்டை கடந்தன

அவ்விடுதி அழகிகளின் நடன நளினங்களுக்காகவாவது மசிந்து தொலைத்திருக்கலாம்

அவன் இருத்தல் குறித்த என் அக்கறையை மேலும் உதாசீனப்படுத்திக் கொண்டேயிருந்தான்

துரோகங்களாவது மன்னிக்கத்தக்கவை; புறக்கணிப்புகளின் வலிகளை என்ன செய்ய?

மறுநாள் விடுமுறை வேறு! இளஞ்சூட்டு காஃபியுடன் கனக்கும் தலையை இலேசாக்கிக் கொள்ளலாம்

நான் பருகிய அப்புறக்கணிப்பு வேதனைகளின் பிம்பங்களை எங்ஙனம் அழிக்க?

என் வெறித்த பார்வைக்கு வலுவிழந்து காலியாக ஆரம்பித்தது கோப்பை

அவனுடைய கோப்பை நிரம்பாதது குறித்த கவலை என்னைவிட்டு அறவே போய்விட்டிருந்தது

ஓரிரு வன்ம வார்த்தைகளால் கனத்த அம்மெளனத்திரை கிழிக்கப்பட்டிருக்கலாம் -

சற்றே கவனக்குறைவால் கை நழுவி உடையும் ஒரு கண்ணாடிப் பேழையைப் போல!

முடியும்தான் என்றாலும் மேலும் இறுக்க விரும்பவில்லை நெருடும் அம்முடிச்சுகளை

என் சாத்தானின் ‘தற்காலிக வெள்ளை மனசுக்கு’ நான் நன்றி சொல்லிக் கொண்டேன்

அவ்விறுக்க சூழ்நிலையை இளகச்செய்ய கடைசியில் தானே உடைந்து சிதறியது என் கோப்பை!

Friday, November 7, 2008

கடவுள் இருக்கிறார்…!


“நாலரை - ஆறு நடை சாத்திடுவாங்க” - ரெண்டு ரூவா சீட்டு, அர்ச்சனைத்தட்டுடன் சில அவசர நடைகள்

“ஸ்பெஷல் தரிசனம் பதினஞ்சாம்!” - சலித்தபடி சவுக்குத் தடுப்பில் மஞ்சள் பை மாட்டினான் மொட்டைத்தலை

மீசை துடைத்து மணிக்கட்டு பார்த்த‌ கருத்தஉதட்டு கட்சி கரைவேஷ்டிக்கு யார் சிபாரிசிலோ ‘க்ளோஸ் – அப்’ காட்சி

மூட்டுவலி த‌ன் மூப்பின் சொத்தாகிப் போன ‘பாம்பட’ கிழவிக்கு முப்பது நிமிட‌ புண்ணிய‌ தரிசன காத்திருப்பு

சீட்டு சரிபார்த்தும் – பார்க்காமலும், மந்திரம் சொல்லியும் - சொல்லாமலும் நாழிக்கொரு தீப ஆராதனை

அரைத் தேங்காயானாலும் கொடுத்த தட்டே திரும்ப வந்ததில் பெருத்த சந்தோஷம் ‘பட்டுப்புடவை’ பெரியம்மாவுக்கு

பிரதோஷ பலன் வேண்டி, நந்தியின் ஒரு காது மறைத்து மறு காதில் குறை கொட்டினாள் ‘பிளாஸ்டிக் வளையல்’ புள்ளத்தாச்சி

“... திவ்ய‌தரிசனம் கண்டு பல‌ன் பெருவீர்!” - திருவிழாவையொட்டி கூட்டத்திடம் கூவி சொன்னது போஸ்டர் தட்டி

பிரகார வெளிச்சுவரின் தென்மேற்கு மூலையில் காரை பெயர்த்து கம்பீரம் கொண்டிருந்தது ஆறு அங்குல‌ ஆலஞ்செடி

“…செவுத்துல நெறைய தப்புமொளைங்க, வேர்ல ஆசிட் ஊத்த சொன்னதா நம்ம ஆறுமுக‌ங்கிட்ட மறக்காம சொல்லிடு…” -

தப்பு முளை த‌ன் கண்ணில் பட்ட கணம், செல்ஃபோனில் அதிகார அதட்டல் விடுத்தார் ஊர்த்தலையாரி

சரபேஸ்வரர் சந்நிதி சுவரில் ‘அவசரக்கடன்’ கழித்த காகமொன்று ப‌ட‌ப‌ட‌த்து பறந்த‌து வடகிழக்கு நோக்கி

‘சுர்’ரென்று சுட்ட வெயில் சுணக்கம் காட்ட, கருமேகக்‌ கண்டன‌ங்காட்டி கடுகடுத்து கரைந்தது ச‌னிமூலை

ரெண்டு நாள் கழித்து ஆறஅமர ஆறுமுகம் ஆசிட் ஊற்றுகையில், ந‌னைந்து நைந்திருந்த‌ன போஸ்ட‌ர் த‌ட்டிக‌ள்!

Thursday, August 7, 2008

பிரபஞ்சம் - ஒரு புதிர்!


பிரபஞ்சம் மட்டுமே புதிரா? பிற பஞ்சங்கள் புதிரல்லவா?
தீர்வுகள் காண வழியுண்டு பஞ்சப் புதிர்க‌ளுக்கு, விழைவில்லை நமக்கதற்கு
ஒரு புள்ளியில் செறிந்து நொடிகளில் பல்கிப் பெருகியதாம் பிரபஞ்சம்
காட்சி பிம்பம் பலதந்தும் அண்டம், பேரண்டம் ஒரே சமயம் விரிக்காதோ நம் விழிகள்?
எரிமீன்கள் பல‌ எறிந்து பால் வீதி வ‌ழிகடந்து –
பூமித்தாய் தூண்டில் சேர்வானவன், எரிபாலகனாம்!
மேற்கில் புதைத்து கிழக்கில் கிளப்பும் வாடிக்கை உட்பட‌ அனைத்துமே வித்தைகள்தான்
வித்தைகள் பயிலும் வித்தகர்கள் உணர்ந்திட்டனரோ சாத்திரத்தின் சூட்சுமமதை?
ஆரமிட்டு ஆராய்ந்து சூட்சுமத்தின் சாள‌ரங்கள் திறந்திடுமா ந‌ம் கலன்கள்
சுயம்பாய் திரியும் கேள்விகளைப் போல் இயற்கை நடத்தும் வேள்விகளும் விரிகிறது
ஆம், பிரபஞ்சம் ஒரு புதிர்தான்...
அது நாம் நெருங்க இயலா ஒரு வெப்பப் புதிர்!