Friday, November 6, 2009

எனது கோப்பைகள் சிரிக்கின்றன!


விருப்பமேயில்லை என்று அறிந்தேதான் அழைத்திருந்தேன் அவனை

வந்த கட்டாயத்திற்காவது விழைந்திருக்கலாம்; புன்னகைத்திருக்கலாம்

செத்த சொற்களை உதிர்த்து தன் கட்டாய இருத்தலை காட்டாமலிருந்திருக்கலாம்

கோப்பையைப் பிடித்த லாவகத்தை சற்றே மாற்றியமைத்திருந்திருக்கலாம்

எப்பொழுதும் போலல்லாமல் இடக்கையைப் பயன்படுத்தியிருக்க வேண்டியதில்லை

இருக்கையில் சற்றே தளர்ந்த தொனியிலாவது அமர்ந்திருந்திருக்கலாம்

பல சமயங்களில் சூழலின் இறுக்கமே சொல்லிவிடுகின்றன எல்லாவற்றையும்

விருப்பமின்றி அருந்துவதென்பது தெரிந்தே நஞ்சினை உட்கொள்வது போலாகும்

கோப்பை வேறு என்னைப் பார்த்து கெக்களிக்க ஆரம்பித்துவிட்டிருந்தது

அவனுக்கு தன்னை சூழலுக்கேற்றவாறு மாற்றிக் கொள்ள தெரியவில்லை -

திரவமானது தான் ஊற்றப்படும் கோப்பையின் வடிவத்திற்கு மாறிக் கொள்வதைப்போல!

கலைக்கப்படாத மெளனத்தின் சாட்சியாய் தளும்பிக் கொண்டேயிருந்தது கோப்பை -

என் விருப்பத்திற்கும் வெறுப்பிற்கும் இடையில் நிரம்புவதும், தீர்வதுமாய்!

நேரம் மெளனத்தின் சஞ்சலத்தை எப்பொழுதும் இருமடங்காக்கவே செய்கிறது

பற்றவைத்த சிகரெட் புகை வேறு மெளனத்திரையில் கறையேற்றிக் கொண்டிருந்தது

மகிழ்ச்சியாயிறங்காத ஒவ்வொரு மிடரும் துக்கத்துடனேயே தொண்டை கடந்தன

அவ்விடுதி அழகிகளின் நடன நளினங்களுக்காகவாவது மசிந்து தொலைத்திருக்கலாம்

அவன் இருத்தல் குறித்த என் அக்கறையை மேலும் உதாசீனப்படுத்திக் கொண்டேயிருந்தான்

துரோகங்களாவது மன்னிக்கத்தக்கவை; புறக்கணிப்புகளின் வலிகளை என்ன செய்ய?

மறுநாள் விடுமுறை வேறு! இளஞ்சூட்டு காஃபியுடன் கனக்கும் தலையை இலேசாக்கிக் கொள்ளலாம்

நான் பருகிய அப்புறக்கணிப்பு வேதனைகளின் பிம்பங்களை எங்ஙனம் அழிக்க?

என் வெறித்த பார்வைக்கு வலுவிழந்து காலியாக ஆரம்பித்தது கோப்பை

அவனுடைய கோப்பை நிரம்பாதது குறித்த கவலை என்னைவிட்டு அறவே போய்விட்டிருந்தது

ஓரிரு வன்ம வார்த்தைகளால் கனத்த அம்மெளனத்திரை கிழிக்கப்பட்டிருக்கலாம் -

சற்றே கவனக்குறைவால் கை நழுவி உடையும் ஒரு கண்ணாடிப் பேழையைப் போல!

முடியும்தான் என்றாலும் மேலும் இறுக்க விரும்பவில்லை நெருடும் அம்முடிச்சுகளை

என் சாத்தானின் ‘தற்காலிக வெள்ளை மனசுக்கு’ நான் நன்றி சொல்லிக் கொண்டேன்

அவ்விறுக்க சூழ்நிலையை இளகச்செய்ய கடைசியில் தானே உடைந்து சிதறியது என் கோப்பை!