Friday, November 7, 2008

கடவுள் இருக்கிறார்…!


“நாலரை - ஆறு நடை சாத்திடுவாங்க” - ரெண்டு ரூவா சீட்டு, அர்ச்சனைத்தட்டுடன் சில அவசர நடைகள்

“ஸ்பெஷல் தரிசனம் பதினஞ்சாம்!” - சலித்தபடி சவுக்குத் தடுப்பில் மஞ்சள் பை மாட்டினான் மொட்டைத்தலை

மீசை துடைத்து மணிக்கட்டு பார்த்த‌ கருத்தஉதட்டு கட்சி கரைவேஷ்டிக்கு யார் சிபாரிசிலோ ‘க்ளோஸ் – அப்’ காட்சி

மூட்டுவலி த‌ன் மூப்பின் சொத்தாகிப் போன ‘பாம்பட’ கிழவிக்கு முப்பது நிமிட‌ புண்ணிய‌ தரிசன காத்திருப்பு

சீட்டு சரிபார்த்தும் – பார்க்காமலும், மந்திரம் சொல்லியும் - சொல்லாமலும் நாழிக்கொரு தீப ஆராதனை

அரைத் தேங்காயானாலும் கொடுத்த தட்டே திரும்ப வந்ததில் பெருத்த சந்தோஷம் ‘பட்டுப்புடவை’ பெரியம்மாவுக்கு

பிரதோஷ பலன் வேண்டி, நந்தியின் ஒரு காது மறைத்து மறு காதில் குறை கொட்டினாள் ‘பிளாஸ்டிக் வளையல்’ புள்ளத்தாச்சி

“... திவ்ய‌தரிசனம் கண்டு பல‌ன் பெருவீர்!” - திருவிழாவையொட்டி கூட்டத்திடம் கூவி சொன்னது போஸ்டர் தட்டி

பிரகார வெளிச்சுவரின் தென்மேற்கு மூலையில் காரை பெயர்த்து கம்பீரம் கொண்டிருந்தது ஆறு அங்குல‌ ஆலஞ்செடி

“…செவுத்துல நெறைய தப்புமொளைங்க, வேர்ல ஆசிட் ஊத்த சொன்னதா நம்ம ஆறுமுக‌ங்கிட்ட மறக்காம சொல்லிடு…” -

தப்பு முளை த‌ன் கண்ணில் பட்ட கணம், செல்ஃபோனில் அதிகார அதட்டல் விடுத்தார் ஊர்த்தலையாரி

சரபேஸ்வரர் சந்நிதி சுவரில் ‘அவசரக்கடன்’ கழித்த காகமொன்று ப‌ட‌ப‌ட‌த்து பறந்த‌து வடகிழக்கு நோக்கி

‘சுர்’ரென்று சுட்ட வெயில் சுணக்கம் காட்ட, கருமேகக்‌ கண்டன‌ங்காட்டி கடுகடுத்து கரைந்தது ச‌னிமூலை

ரெண்டு நாள் கழித்து ஆறஅமர ஆறுமுகம் ஆசிட் ஊற்றுகையில், ந‌னைந்து நைந்திருந்த‌ன போஸ்ட‌ர் த‌ட்டிக‌ள்!

Thursday, August 7, 2008

பிரபஞ்சம் - ஒரு புதிர்!


பிரபஞ்சம் மட்டுமே புதிரா? பிற பஞ்சங்கள் புதிரல்லவா?
தீர்வுகள் காண வழியுண்டு பஞ்சப் புதிர்க‌ளுக்கு, விழைவில்லை நமக்கதற்கு
ஒரு புள்ளியில் செறிந்து நொடிகளில் பல்கிப் பெருகியதாம் பிரபஞ்சம்
காட்சி பிம்பம் பலதந்தும் அண்டம், பேரண்டம் ஒரே சமயம் விரிக்காதோ நம் விழிகள்?
எரிமீன்கள் பல‌ எறிந்து பால் வீதி வ‌ழிகடந்து –
பூமித்தாய் தூண்டில் சேர்வானவன், எரிபாலகனாம்!
மேற்கில் புதைத்து கிழக்கில் கிளப்பும் வாடிக்கை உட்பட‌ அனைத்துமே வித்தைகள்தான்
வித்தைகள் பயிலும் வித்தகர்கள் உணர்ந்திட்டனரோ சாத்திரத்தின் சூட்சுமமதை?
ஆரமிட்டு ஆராய்ந்து சூட்சுமத்தின் சாள‌ரங்கள் திறந்திடுமா ந‌ம் கலன்கள்
சுயம்பாய் திரியும் கேள்விகளைப் போல் இயற்கை நடத்தும் வேள்விகளும் விரிகிறது
ஆம், பிரபஞ்சம் ஒரு புதிர்தான்...
அது நாம் நெருங்க இயலா ஒரு வெப்பப் புதிர்!

Tuesday, July 15, 2008

கலையாத‌ மெளனம்


முன் பனிக்காலத்தின்
வைகறைப்பொழுதொன்றில்
என் பெயரை மெல்ல உச்சரித்துப்பார்
உனக்கும், எனக்குமான‌
மெளனம் விலகட்டும்!

மரங்களின் கண்கள்


ஒவ்வொரு இலை உதிரும்போதும்
திறந்து மூடுகின்றன‌ மரங்களின் கண்கள்
ஆயிரமாயிரம் திறந்து மூடல்கள் -
ஒவ்வோர் இலையுதிர்காலத்திற்கும்
எனினும், இலையுதிர்காலங்கள் தொடர்வதில்லை
வசந்தம் நோக்கிய‌
காத்திருப்புகளில் மகிழ்கின்றன மரங்கள்
மரங்களுக்கான சில நியதிகள்
மானுடத்திற்கும் பொருந்தவே செய்கின்றன!

Monday, July 14, 2008

வெளிப்படாத புராதனங்கள்...


புரிந்து கொள்ளும் நிலையிலில்லை யாரும்
அறிய வைக்கவும் அவசியமில்லை

படிந்து கொண்டிருக்கின்றன‌ நினைவுகள் -
நமக்கல்லாத நாளையில் புதைய‌

மீண்டும் சில‌ நினைவுகள் மலரலாம் -
நாளை மறு நாள் புதைவதற்கு

புதைபவை எல்லாம் அழிபவையல்ல‌ -
அவை புராதனச் சின்னங்கள்

புரிதல்கள் அறிந்த உலகில்
அப்புராதனங்கள் ஒரு நாள் வெளிப்படும்

அவை நாமல்லாத உலகாயிருக்கலாம்

காலம் மட்டுமே சாஸ்வதம்

வெளிப்படாத புராதனங்கள்
காலத்தின் கதவுகள் நோக்கியே காத்திருக்கின்றன‌!

‘ஜீரோ வாட்ஸ்’ சந்தோஷம்


நினைவுகளின் நீட்சிக்கான கால அவகாசத்தில் விரிகிறது,
மின்துண்டிப்பு செய்ய‌ப்ப‌ட்ட பின் மாலைப்பொழுதொன்று
நார்த்தங்குருவிகள் அமைதி காக்கின்றன‌
ஆந்தைகள் தலைதிருப்பி முறைக்கின்ற‌ன‌
தவிட்டுக்குருவிகள் திகைத்தோடுகின்றன‌
வைக்கோல்போர் பாம்புகள் உடல்சுருட்டி நெளிகின்றன‌
முன்னங்கால்கள் மடக்கி படுக்கின்றன சில மாடுகள்
‘இப்போதைக்கு வராதாம்!' - யாரோ உரத்து சொல்கிறார்கள்
அடுக்களை பாட்டிகள் உச்சுக்கொட்டுகிறார்கள்
தாத்தாக்கள் பேச்சைக் குறைக்கிறார்கள்
அப்பாக்க‌ள் சிரிப்ப‌து போல் தெரிகிறார்கள்
செட்டியார் சைக்கிள் பெடல் கிறீச்சிடுகிறது
மாட்டுக்கொட்ட‌கை பக்கத்திலிருந்து சன்னமானதொரு சீட்டியொலி
புத்தகங்கள் விசிறியெறியப்பட்டு விளையாட்டு களைகட்டுகிறது
என்றும் போலல்லாமல் மேட்டுத்தெரு ஊமையனும் கலந்து கொள்கிறான்
அம்மாக்கள் பிசையும் சோற்றில் நிலவொளியும் கலக்கிறது
சிதறிய மேகபஞ்சுகள் நிலவின் கறைதுடைக்க முற்படுகின்றன‌
பெயர் தெரியாத பறவைகள் வடக்கு நோக்கி செல்கின்றன‌
செவ்வ‌ரளி ம‌ர இலைகள் புதுப்பொலிவுபெறுகின்றன
காசித்தும்பைச் செடிகள் விரைந்து வேர்விடுகின்றன‌
கத்தரி பூக்கள் தம்மை மேலும் நிறமேற்றிக் கொள்கின்றன‌
வண்டுகளின் ரீங்காரத்துடன் சூலகமடைகின்றன மகரந்தத்தூள்கள்
பவழமல்லி வாசம் முற்றத்தில் பரவுகிறது
இதோ..... மின்னிணைப்பு திரும்ப கிடைக்கிறது…..
அம்மாக்கள் க‌டுமையாகிறார்கள்
குழந்தைகள் கண்செருக புத்தகம் பிரிக்கிறார்கள்
ஊமைய‌ன் எரிச்சலுடனே திரும்புகிறான்
செயற்கை வெளிச்சத்தில் இயற்கை தன்னை தோற்றதாகவே காட்டிக்கொள்கிறது
மெல்ல நகரும் மேகங்களால் மறையும் நிலவு அதையே பறைசாற்றுகிறது
மித‌ப்ப‌தும் பின் அமிழ்வ‌துவ‌மாக‌வே இருந்திருக்கிற‌து ச‌ந்தோஷ‌ம்
திடீர் ஹாரன் சத்தத்தில் சுழியாகிறது நினைவுகளுக்கான கால அவகாசம்
எதிர்ப்படும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் கூசுகின்றன கண்கள்!

இப்போதைக்கு விட்ட‌ மழை!


இப்போதைக்கு விடாத மழையில் அவ்வளவாக‌ அழகில்லைதான்
குடையிருந்தும் குதிகால் நடையில் கடுப்புடன் கடையொதுங்குகிறான் புதுசெருப்புக்காரன்
மூக்கணாங்கயிறும், பாஸ்கர் சிலேட்டும் ஊர் கண்ணிலிருந்து ஓய்வுபெற்று உள்செல்கின்றன‌
வயிறு பிளந்த பின் கயிறு கட்டிக் கொண்ட ரேடியோவுக்கு தொண்டை கனக்கிறது
நரை மறைத்த‌ நடுத்தர வயது வேஷ்டிக்கோ வயக்காட்டு வயித்தெரிச்சல்
எதிர் வீட்டு பொடிசுகளின் குதூகூல கத்திக்கப்பல்கள் குறைதூரத்தில் தலை சாய்கின்றன‌
உமி மூட்டை கதகதப்பில் நிலை மறந்த‌ ‘செகப்பு சுடி - நீல சட்டை’ ஜோடி தவிர்த்து,
தற்காலிக‌ கூரையடி காத்திருப்புகளில் அனைவருக்குமே அமைதியில்லை!
அஞ்சு மணி அவசர இருட்டுக்கு படபடத்து கண்விழிக்கிறது உபய உபத்திரவம் ஏதுமில்லா பச்சை டியூப் லைட்
சதா ‘எட்டுக்கு மூணு’ நடைபழகும் மளிகைக்கடை அரைடிரவுசருக்கு அரிதான ஸ்டூல் ஓய்வு
இடியொன்று தன் பலத்த அதிருப்தி காட்ட, ஆங்காரம் குறைந்து வெலவெலத்தது மழை
நனைந்து ஒதுங்கிய முக்குத் தெரு முதலியார் வீட்டு நாய் உட‌ல் சிலிர்த்து வாலாட்டுகிறது
தலை சிறுத்து உடல் பருத்த தவளைகளிரண்டு தத்தித் தாவி‌ தண்ணீர் கலக்கின்றன‌
‘…மெரண்டு போயி நிக்குங்களோ என்னவோ?’ - முனகியபடி கோணி போர்த்தி விரைகிறாள் பால் சொம்புக்கு சொந்தக்காரி
புண்ணாக்கு ருசித்த பெரிசொன்று ஸ்டார்ட்டர் போட்டு டி.வி.எஸ் 50 மிதிக்கிறது
‘உங்களுக்கு வேற ஏதாவது வேணுமா சார்?’ - கடைக்காரன் கேட்க கலைகிறது என் கவனம்
‘வேறென்ன? மீண்டும் ஒரு மழைதான்!’ - சொல்லாமல் வானம் பார்த்து கைகட்டி வெளியேறுகிறேன்
இப்போதைக்கு அடுத்த மழை வரப்போவதில்லை என்பதை நம்பாமல்!

காதல் கி. பி 200x


பய‌‌புள்ள‌ காட்னான் சிக்ன‌லு
சிறுக்கிக்கு இர்ந்தது ‘சில்’லுன்னு
பைசா பார்ட்டி டாட்டரு
நைசா தட்டுனான் லெட்டரு
வெர்பல் ப்ரபோஸ்ஸூ ஈவ்னிங்கு
சத்தாய்ப்பு தெனமும் மார்னிங்கு
செருப்பால அடிப்பன்னு திட்டினா
அப்பால‌ ப்ரைட்டாச்சு ‘ரெட்டினா’
வயசோ ரெண்டுக்கும் விடலை
ஓயாம போட்டாங்கோ கடலை
செல்லுக்கு எப்போதும் ‘டாப்‍-அப்’பு
மெசேஜூம் அப்பப்ப ‘பாப்‍-அப்’பு
மிஸ்டு காலெல்லாம் கிஸ்டு காலாச்சு
கிஸ்டு அக்கேஸனெல்லாம் -
நெவ‌ர் மிஸ்டு அக்கேஸனாச்சு
‘ப்யூர் லவ்’வுன்னு சொன்னாங்கோ கேக்க‌சொல்ல‌
தெரு நாய்ங்க‌ சிரிச்சிதுங்க‌ மனசுக்குள்ள‌
இட்டுகினு போன‌ ஷோவெல்லாம் மேட்டினி
வூட்டு மக்க‌ கெடந்தாங்கோ ப‌ட்டினி
ஊரல்லாம் தெர்ஞ்சிது டீலிங்கு
வந்துச்சு சோடிக்குஃபீலிங்கு
அண்ணம்மார் தந்தாங்கோ வார்னிங்கு
…த்தா, வந்துச்சு ஒருதபா டர்னிங்கு
இட்டுகினு வந்தானுவோ பீட்டர‌
தின்சு தின்சா வுட்டான் மேட்டர‌
…ய்யால‌,
ம‌னச கசக்கி போட்டா தூசியா
நம்பர மாத்திகினா ஈஸியா
அவுங்க சோடிபோட இவனாண்ட‌ தாடி & பீடி
‌தோஸ்துங்க‌ திட்னாங்கோ‌ன்னு
பட்டுன்னு யோசிச்சு, சட்டுன்னு கட்டுனான்
‘வாம்மா’ன்னு - மாமா பொண்ண‌!
மஜா முப்பது நாள் மட்டுமில்ல‌ன்னு
புர்ஞ்சிது அதுக்கில்ல எல்லைன்னு‌
இவுங்க வாழ்க்க போற‌விதம் சுகரு!
நமக்கென்னாத்துக்கு நைனாஃபிகரு?

நகரத்தின் கைகள்

எளிய மனிதர்களையும், ஏர் ஹாரன்களையும் குப்பைக்கூளங்களுடன் தன் எல்லைக்கப்பால் புறம் தள்ளுகின்றன‌ நகரத்தின் கைகள்

ஆம், அவர்களுக்கு இங்கென்ன வேலை? நகரத்தின் கழிவுகளகற்றி சொற்ப சில்லறைகள் எண்ணும் ஒரு சிலர் தவிர்த்து!

கனவுத் தொழிற்சாலையில் தன் மூங்கில் கருவி ஜெயிக்க விரும்பியவன், சிக்குகிறான் நகரத்தின் ஒரு மாலைநேர‌ விளக்குப் பொறியில்

முலைகள் தளர்த்திக் காட்டி வியாபாரம் பெருக்கும் 'வினைல்' விளம்பர அழகிகளின் சிரிப்பில் விழுந்தெழுகிறான், பத்திரமாக‌ தன் கருவி காத்து

தகதகக்கும் தன் பகல் கோபத்தில் புகைக்கரி பூசி, வியர்வைப் பசி தீர்த்து கெக்களித்து ஆங்கார ஆட்டம் ஆடுகிறது நகரம்

அங்குச அச்சமேதுமிலா இயந்திர யானைகள் கான்கிரீட் குழம்பிறைத்து கட்டிடக் காடுகள் வளர்த்து நடைபாதைக‌ள் மறுக்கின்றன‌

வ‌ஞ்ச‌ம் ப‌துக்கி செயற்கைப் புன்னகை உதிர்த்து 'எக்ஸ்கியூஸ் மீ', 'ஸாரி' சொல்லி வாசனையுடன் வில‌குகிறார்க‌ள் வ‌லிய‌ ம‌னித‌ர்க‌ள்

நகரத்தின் அடங்கா இரைச்சலில் தன் கருவி தோற்றது குறித்து இன்று மீண்டும் அழுகிறான் நம் மூங்கில் கலைஞன், தன் இருகாதுகள் பொத்தி

ஜெயித்தவர்கள், ஜெயித்ததாக பீடிகை செய்பவர்கள் தவிர்த்து மற்ற‌ அனைவருக்குமே இங்கு நிரந்தர இட‌மில்லைதான்

நகரத்தின் ‘சுத்த’த்தில் அழுக்கேறி பொலிவிழக்கும் த‌ன் கருவி கண்டு, பின்னொரு மாலை நேரத்தில் மஞ்சள் நிற‌ டிக்கெட் வாங்குகிறான் சிகப்பு‌ பேருந்தில்

எல்லை தாண்டிய பேருந்தில், இளங்காற்றின் இதத்தில், ஜன்னல் கம்பிகளில் முகம் சாய்த்து உறங்குகிறான், எச்சில் ஒழுக‌

பழுத்த சூரியன் புதையும் தருவாயில், பிளாஸ்டிக் பைக‌ள் பொறுக்கிய‌ அச‌தி மறந்து தும்பி பிடித்து விளையாடுகிறார்க‌ள் சில‌ சிறுவ‌ர்க‌ள்

ஊர் திரும்பியது குறித்து எல்லோருமே கேட்பார்கள்; தன் கருவி துடைத்து பின் அழுகையுடனே இவன் சொல்வான்: 'டவுனில் மூத்திரம் பெய்யக்கூட‌ இடமில்லை…' என்று!

Sunday, July 13, 2008

கறுப்பு - வெள்ளை வண்ணங்கள்

உனக்கும் எனக்குமானது எப்பொழுதும் சதுரங்க விளையாட்டாகவே இருந்திருக்கிறது
போருக்கான ஆரம்ப முனைப்பிலிருந்தன நமதிரு படைகளும்
‘இம்முறை எனக்கு விளையாட பிடிக்கவில்லை’ என்றேன் நான்
‘ஏன்?’ எனும் தொனியில் இருந்தன‌ உனது முகஅசைவுகள்
‘இவ்விளையாட்டு வண்ணமயமானதாக எனக்கு தோன்றவில்லை’ என்றேன்
புன்முறுவலுடன் காலாட்படைக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தாய் நீ
மடிவதற்கென்றே போர்க்களம் புகுபவை விசுவாசமுள்ள‌‌ இக்காலாட்படைக‌ள்
பருத்த உடல்க‌ள் என்பதாலோ என்னவோ யானைகளுக்கு தடையில்லா நேர்க்கோட்டுப் பாதைகள்
குறுக்கும் நெடுக்குமாய் இரவு பகல் கடந்து களைக்கின்றன‌‌‌ நமது பாலைவனக்கப்பல்கள்
குளம்பொலியில்லா குதிரைகளின் வினோத தாக்குதல்கள் துரோகத்தின் வலியை கற்பிக்கின்றன‌
ஒரு புள்ளியில் செறிந்து அழுத்துகின்றன இத்துரோகத்தின் வலிகள்
மகுடமிட்ட‌ நமது பெயரளவு ராஜாக்கள் எப்பொழுதும் பீதியுடனே
ராணிகளுக்கு சக்தி தந்து வேடிக்கை பார்ப்பதென்பது இவர்கள் வாடிக்கை
நீ உன் குதிரைகளுக்குண்டான‌ முழுத்திறனையும் பிரயோகித்தாய்
உன் அலட்சிய சிரிப்பை மென்றுதின்றபடி முன்னேறின கடிவாளம‌ற்ற உனது குதிரைகள்
துரோகத்தின் வலிகளுக்கு கலங்காதவர்களுக்கே இங்கே வெற்றி வாய்ப்பு
இறுதியில் எனது ராஜாவின் தலைகொய்து நடனமாடியது உன் குதிரைகளுள் ஒன்று
தனது ராணியின் அரவணைப்பிலிருந்தபடி சிரித்துக் கொண்டிருந்தார் உன் ராஜா
‘இந்த ஆட்டம் வண்ணமயமானதாக இல்லை’ என்றேன் நான் மீண்டும்
‘கறுப்பும், வெள்ளையும் வண்ணங்கள் இல்லையா என்ன?’ என்றாய் நீ
ஆம், கறுப்பும் வெள்ளையும் ஒரு வகையில் வண்ணங்கள்தாம்!
அவை சதுரங்கச் சமவெளியில் குருதி கொப்பளிக்கா மரணங்களுக்கு வித்திடும் வண்ணங்கள்…