Saturday, September 3, 2011

மலைகளினூடான பயணங்கள்...!



மலைகளினூடான பயணங்கள்
எல்லா குழந்தைகளையும் குதூகலப்படுத்துகின்றன‌
பல மத்திம வயதுக்காரர்களை குழப்புகின்றன‌
சில மத்திம வயதுக்காரர்களை ஆசுவாசமடையச் செய்கின்றன‌


மலைகளினூடான ஒரு பயணத்தின் தொடக்கத்தில்
பாக்கியவான்கள் யார்யாரென முடிவாவதில்லை
அவர்களை மலைகளினூடான ஒரு பயணமோ
அல்லது யாரோ ஒரு பயணியோ முடிவு செய்வதில்லை
மாறாக அவர்களை மலைகள் மட்டுமே கண்டுணர்கின்றன‌


மலைகளினூடான பயணங்களில்
குழந்தைகள் கேள்வி கேட்கத் தொடங்கி விடுகிறார்கள்
மலைகளுக்கு அப்பால் உள்ளவை பற்றி
மலைகளில் வசிக்கும் பறவைகள், விலங்குகள் பற்றி
மலைகளிலிருந்து விழும் அருவிகள் பற்றி
பாம்புகள் இருக்குமா என்ற தமது அச்சங்கள் பற்றி
அவர்கள் சிந்தனைகள் எளிமையானவை
அதற்கு எளிய பதில்கள் மட்டுமே போதுமானவை
மலைகளினூடான பயணங்களில்
குழந்தைகள் யாவுமே தூங்க முற்படுவதில்லை
மலைகளினூடான பயணத்திற்குப் பிறகு
மலைகளை வரைவது அவர்களுக்கு இலகுவாகிறது
தான் கண்ட அல்லது காணாத சூர்யோதத்தையோ, அஸ்தமனத்தையோ
அவர்களால் மலைகளுடன் பொருத்திப் பார்க்க‌ இயல்கிறது


மலைகளினூடான பயணங்களில்
பல மத்திம வயதுக்காரர்கள் குழப்பமடைகிறார்கள்
பொன்பொருள் நோக்கிய வாழ்வில் தாம் தோல்வியடைவ‌தைப் பற்றி
தமது துர்கனவுகள் ஒவ்வொன்றாக‌ நிறைவேறுவதைப் பற்றி
நிறைவேறாத தனது காதலை அல்லது காமத்தைப் பற்றி
பிள்ளைகள் தம் சுயவிருப்பங்களில் உறுதியடைவதைப் பற்றி
சமூகத்தில் தாம் புறக்கணிக்கப்பட்ட தருணங்களைப் பற்றி
மிச்சமிருக்கும் கடன்களை திருப்பி செலுத்துவதைப் பற்றி
மலைகளினூடான பயணங்களில் பயணக்களைப்பை மீறாமல்
இம்மத்திம வயதுக்காரர்கள் தூங்க முற்படுகிறார்கள்
தம்மால் துவேஷிக்கப்பட்டவர்களின் கண்கள்
ஒருபோதும் அவர்களை தூங்க அனுமதிப்பதேயில்லை


மலைகளினூடான பயணங்களில்
சில மத்திம வயதுக்காரர்கள் ஆசுவாசப்பட்டுக் கொள்கிறார்கள்
வாழ்க்கைப் பயணத்தில் தான் அடைந்த வெற்றிகள் குறித்து
தம் பிள்ளைச்செல்வங்கள் வாழக் கற்றுக் கொண்டது குறித்து
இந்நாள்வரை தான் அணிந்து வரும் கெளரவமான ஆடைகள் குறித்து
தாம் செய்த தவறுகள் தமக்கு மட்டுமே தெரிந்திருப்பது குறித்து
தம்மைத் தேடி வந்தவர்களையும் அவர்களளித்த கெளரவங்கள் குறித்தும்
அவர்கள் பெருமிதத்துடன் ஆசுவாசமடைந்து கொள்கிறார்கள்
மலைகளினூடான பயணங்களில்
இம்மத்திம வயதுக்காரர்கள் தூங்க முற்படுவதில்லை
மாறாக பயணம் தரும் களைப்பு அவர்களை கண்ணயரச் செய்கின்றது


மலைகளினூடான மனிதர்களின் தீராத‌ பயணங்களில்
மலைகள் யாரைப் பார்த்தும் புன்னகைப்பதில்லை
யாரையும் அச்சம் கொள்ளச் செய்வதில்லை
மனம் பிறழ்ந்து திரிபவர்களை ஏளனம் செய்வதில்லை
தமது சாசுவதம் குறித்து இறுமாப்படைவதில்லை
மாறாக மலைகள் யாவுமே மெளனமுற்றிருக்கின்றன‌


தம்மைக் கடந்து செல்பவர்களுக்கெல்லாம்
மலைகள் கற்பிக்க விரும்புவது ஒன்றை மட்டும்தான்
அது ஆழ்ந்து மெளனித்திருத்தலைப் பற்றியது!
மலைகளினூடான பயணங்களில் குழந்தைகள் தவிர்த்து
தூங்குபவர்கள் தூங்க முற்படுபவர்கள் யாவருமே பாக்கியவான்களல்ல‌
மலைகள் கற்பிப்பதை உணர முற்படுபவர்களே பாக்கியவான்கள்
அவர்களை மலைகள் மட்டுமே கண்டுணர்கின்றன!