Wednesday, November 24, 2010

அபத்த வாழ்வின் சூத்திரங்கள்!


வாழ்வில் தம்மை வெற்றி பெற்றுவிட்டதாக பாவனை புரிபவர்கள்

வெற்றியின் சூத்திரங்களை கற்று தேர்ந்துவிட்டதாக கருதிக் கொள்கிறார்கள்

தாமறிந்த சூத்திரங்களை அவர்கள் பிறருக்கு கற்பிப்பதேயில்லை

தாமாக கற்றுத் தேர்பவர்களை முன்னேற வழிவிடுவதுவுமில்லை

மாறாக அவர்களிடத்து ஒருவித கள்ளப்புன்னகை உதிர்க்கிறார்கள்

வெற்றியின் பீடம் நோக்கிய வழுக்குமரத்தில் பிடிகள் இறுகுகின்றன

அதில் ஒரு குறிப்பிட்ட தொலைவு முன்னேறிச் சென்றவுடன்

வாழ்வின் அத்துனை வெற்றிகளையும் அடைந்துவிட்டதாக அறிவிக்கிறார்கள்

அவர்களின் புன்னகை முகங்களில் இப்பொழுது மமதையின் கெக்களிப்பு

மேலே இருப்பது பீடங்களல்ல பீடம் மட்டுமேயென உறுதியடைந்ததும்

அவர்களுக்குள் விரைவாகப் பற்றிக் கொள்கிறது அதீத பதட்டமொன்று

அபத்த வாழ்வின் வெற்றி சூத்திரங்கள் பத்திரப்படுத்தப்படுகின்றன

அவற்றை கீழே நிற்பவர்கள் புரிந்து கொள்ள விடப்படுவதேயில்லை

வேர் பற்ற விழைந்து பின் நம்பிக்கையிழந்து வெளியேறுபவர்களின்

பெருமூச்சு வெப்பக்காற்றில் இறுகுகின்றன வழுக்குமரத்தின் வேர்கள்

அவை வெறுப்பின் கசப்புறிஞ்சி பண வாசனையை பரவவிடுகின்றன

அவர்கள் தமது குழந்தைகள் புரிந்துகொள்ளும் வயதெட்டும் வரை

விரல்கள் கடுக்க பற்றியிருக்கிறார்கள் பளபளப்பேறிய அவ்வழுக்குமரத்தை

எதையும் ஒப்புக் கொடுப்பதென்பது அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டிருக்கிறது

அபத்த வாழ்வின் வெற்றி சூத்திரங்களைக் கற்றுவிட்டதாக நினைப்பவர்கள்

கறந்த பாலின் வெம்மைக்கான காரணத்தை உணர்ந்திருக்கவில்லை

பிறந்த குழந்தையின் சிரிப்பை பொருட்படுத்துவதேயில்லை

உழைத்துக் களைத்தவனின் முகச்சுருக்கங்களை கவனிப்பதேயில்லை

பனித்துளியொன்றின் அழகிய கணங்களை அனுபவிப்பதில்லை

காற்று இலைகளோடு பேசும் மொழியைக் கற்றிருக்கவில்லை

சூரியக்கதிர்களின் சொஸ்தப்படுத்தும் சக்தியைத் தெரிந்திருக்கவில்லை

மலைகளின் நீண்ட கனத்த மெளனத்தைப் புரிந்திருக்கவில்லை

பற்றற்று விலகியவர்களின் ஒளிரும் முகங்களை தரிசிப்பதேயில்லை

அவர்கள் கடைசிவரை ஒத்துக் கொள்ள முயற்சிப்பதேயில்லை

வாழ்வின் சூத்திரங்கள் எதை நிறுவ முற்படுகின்றனவென்பதை!

No comments: