
நினைவுகளின் நீட்சிக்கான கால அவகாசத்தில் விரிகிறது,
மின்துண்டிப்பு செய்யப்பட்ட பின் மாலைப்பொழுதொன்று
நார்த்தங்குருவிகள் அமைதி காக்கின்றன
ஆந்தைகள் தலைதிருப்பி முறைக்கின்றன
தவிட்டுக்குருவிகள் திகைத்தோடுகின்றன
வைக்கோல்போர் பாம்புகள் உடல்சுருட்டி நெளிகின்றன
முன்னங்கால்கள் மடக்கி படுக்கின்றன சில மாடுகள்
‘இப்போதைக்கு வராதாம்!' - யாரோ உரத்து சொல்கிறார்கள்
அடுக்களை பாட்டிகள் உச்சுக்கொட்டுகிறார்கள்
தாத்தாக்கள் பேச்சைக் குறைக்கிறார்கள்
அப்பாக்கள் சிரிப்பது போல் தெரிகிறார்கள்
செட்டியார் சைக்கிள் பெடல் கிறீச்சிடுகிறது
மாட்டுக்கொட்டகை பக்கத்திலிருந்து சன்னமானதொரு சீட்டியொலி
புத்தகங்கள் விசிறியெறியப்பட்டு விளையாட்டு களைகட்டுகிறது
என்றும் போலல்லாமல் மேட்டுத்தெரு ஊமையனும் கலந்து கொள்கிறான்
அம்மாக்கள் பிசையும் சோற்றில் நிலவொளியும் கலக்கிறது
சிதறிய மேகபஞ்சுகள் நிலவின் கறைதுடைக்க முற்படுகின்றன
பெயர் தெரியாத பறவைகள் வடக்கு நோக்கி செல்கின்றன
செவ்வரளி மர இலைகள் புதுப்பொலிவுபெறுகின்றன
காசித்தும்பைச் செடிகள் விரைந்து வேர்விடுகின்றன
கத்தரி பூக்கள் தம்மை மேலும் நிறமேற்றிக் கொள்கின்றன
வண்டுகளின் ரீங்காரத்துடன் சூலகமடைகின்றன மகரந்தத்தூள்கள்
பவழமல்லி வாசம் முற்றத்தில் பரவுகிறது
இதோ..... மின்னிணைப்பு திரும்ப கிடைக்கிறது…..
அம்மாக்கள் கடுமையாகிறார்கள்
குழந்தைகள் கண்செருக புத்தகம் பிரிக்கிறார்கள்
ஊமையன் எரிச்சலுடனே திரும்புகிறான்
செயற்கை வெளிச்சத்தில் இயற்கை தன்னை தோற்றதாகவே காட்டிக்கொள்கிறது
மெல்ல நகரும் மேகங்களால் மறையும் நிலவு அதையே பறைசாற்றுகிறது
மிதப்பதும் பின் அமிழ்வதுவமாகவே இருந்திருக்கிறது சந்தோஷம்
திடீர் ஹாரன் சத்தத்தில் சுழியாகிறது நினைவுகளுக்கான கால அவகாசம்
எதிர்ப்படும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் கூசுகின்றன கண்கள்!