
போருக்கான ஆரம்ப முனைப்பிலிருந்தன நமதிரு படைகளும்
‘இம்முறை எனக்கு விளையாட பிடிக்கவில்லை’ என்றேன் நான்
‘ஏன்?’ எனும் தொனியில் இருந்தன உனது முகஅசைவுகள்
‘இவ்விளையாட்டு வண்ணமயமானதாக எனக்கு தோன்றவில்லை’ என்றேன்
புன்முறுவலுடன் காலாட்படைக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தாய் நீ
மடிவதற்கென்றே போர்க்களம் புகுபவை விசுவாசமுள்ள இக்காலாட்படைகள்
பருத்த உடல்கள் என்பதாலோ என்னவோ யானைகளுக்கு தடையில்லா நேர்க்கோட்டுப் பாதைகள்
குறுக்கும் நெடுக்குமாய் இரவு பகல் கடந்து களைக்கின்றன நமது பாலைவனக்கப்பல்கள்
குளம்பொலியில்லா குதிரைகளின் வினோத தாக்குதல்கள் துரோகத்தின் வலியை கற்பிக்கின்றன
ஒரு புள்ளியில் செறிந்து அழுத்துகின்றன இத்துரோகத்தின் வலிகள்
மகுடமிட்ட நமது பெயரளவு ராஜாக்கள் எப்பொழுதும் பீதியுடனே
ராணிகளுக்கு சக்தி தந்து வேடிக்கை பார்ப்பதென்பது இவர்கள் வாடிக்கை
நீ உன் குதிரைகளுக்குண்டான முழுத்திறனையும் பிரயோகித்தாய்
உன் அலட்சிய சிரிப்பை மென்றுதின்றபடி முன்னேறின கடிவாளமற்ற உனது குதிரைகள்
துரோகத்தின் வலிகளுக்கு கலங்காதவர்களுக்கே இங்கே வெற்றி வாய்ப்பு
இறுதியில் எனது ராஜாவின் தலைகொய்து நடனமாடியது உன் குதிரைகளுள் ஒன்று
தனது ராணியின் அரவணைப்பிலிருந்தபடி சிரித்துக் கொண்டிருந்தார் உன் ராஜா
‘இந்த ஆட்டம் வண்ணமயமானதாக இல்லை’ என்றேன் நான் மீண்டும்
‘கறுப்பும், வெள்ளையும் வண்ணங்கள் இல்லையா என்ன?’ என்றாய் நீ
ஆம், கறுப்பும் வெள்ளையும் ஒரு வகையில் வண்ணங்கள்தாம்!
அவை சதுரங்கச் சமவெளியில் குருதி கொப்பளிக்கா மரணங்களுக்கு வித்திடும் வண்ணங்கள்…
No comments:
Post a Comment