
ஆம், அவர்களுக்கு இங்கென்ன வேலை? நகரத்தின் கழிவுகளகற்றி சொற்ப சில்லறைகள் எண்ணும் ஒரு சிலர் தவிர்த்து!
கனவுத் தொழிற்சாலையில் தன் மூங்கில் கருவி ஜெயிக்க விரும்பியவன், சிக்குகிறான் நகரத்தின் ஒரு மாலைநேர விளக்குப் பொறியில்
முலைகள் தளர்த்திக் காட்டி வியாபாரம் பெருக்கும் 'வினைல்' விளம்பர அழகிகளின் சிரிப்பில் விழுந்தெழுகிறான், பத்திரமாக தன் கருவி காத்து
தகதகக்கும் தன் பகல் கோபத்தில் புகைக்கரி பூசி, வியர்வைப் பசி தீர்த்து கெக்களித்து ஆங்கார ஆட்டம் ஆடுகிறது நகரம்
அங்குச அச்சமேதுமிலா இயந்திர யானைகள் கான்கிரீட் குழம்பிறைத்து கட்டிடக் காடுகள் வளர்த்து நடைபாதைகள் மறுக்கின்றன
வஞ்சம் பதுக்கி செயற்கைப் புன்னகை உதிர்த்து 'எக்ஸ்கியூஸ் மீ', 'ஸாரி' சொல்லி வாசனையுடன் விலகுகிறார்கள் வலிய மனிதர்கள்
நகரத்தின் அடங்கா இரைச்சலில் தன் கருவி தோற்றது குறித்து இன்று மீண்டும் அழுகிறான் நம் மூங்கில் கலைஞன், தன் இருகாதுகள் பொத்தி
ஜெயித்தவர்கள், ஜெயித்ததாக பீடிகை செய்பவர்கள் தவிர்த்து மற்ற அனைவருக்குமே இங்கு நிரந்தர இடமில்லைதான்
நகரத்தின் ‘சுத்த’த்தில் அழுக்கேறி பொலிவிழக்கும் தன் கருவி கண்டு, பின்னொரு மாலை நேரத்தில் மஞ்சள் நிற டிக்கெட் வாங்குகிறான் சிகப்பு பேருந்தில்
எல்லை தாண்டிய பேருந்தில், இளங்காற்றின் இதத்தில், ஜன்னல் கம்பிகளில் முகம் சாய்த்து உறங்குகிறான், எச்சில் ஒழுக
பழுத்த சூரியன் புதையும் தருவாயில், பிளாஸ்டிக் பைகள் பொறுக்கிய அசதி மறந்து தும்பி பிடித்து விளையாடுகிறார்கள் சில சிறுவர்கள்
ஊர் திரும்பியது குறித்து எல்லோருமே கேட்பார்கள்; தன் கருவி துடைத்து பின் அழுகையுடனே இவன் சொல்வான்: 'டவுனில் மூத்திரம் பெய்யக்கூட இடமில்லை…' என்று!
2 comments:
Excellent works keep it up da
S.Rajamurugan
really nice
Post a Comment